50 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவிக்கிறோம்

50 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவிக்கிறோம் என்று மாவட்ட கலெக்டர் விசாகனிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2021-07-19 15:17 GMT
திண்டுக்கல்: 

சாலை வசதி
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஆனாலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் புகார் மனுக்களை செலுத்துவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு பெட்டி வைக்கப்பட்டது.
அதில் பொதுமக்கள் தங்களின் மனுக்களை போட்டுச்சென்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் தாலுகா வெள்ளக்கவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சிலர் கலெக்டர் விசாகனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளது.

இங்குள்ள கிராம மக்கள், மாணவ-மாணவிகள் சந்தை, பள்ளிகளுக்கு செல்வதற்கு வட்டக்கானல் வழியாக கொடைக்கானலுக்கு தான் வர வேண்டும். ஆனால் வெள்ளக்கவியில் இருந்து வட்டக்கானல் வரை சுமார் 50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக அவர்கள் கொடைக்கானலில் ஆர்.டி.ஓ. முருகேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். 

ஆர்ப்பாட்டம்
இதேபோல் குஜிலியம்பாறையை அடுத்த நாகையகோட்டையை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது கடந்த ஆண்டு (2020) மழையால் மக்காச்சோளம், வெங்காய பயிர்கள் நாசமாகின. அதற்கு காப்பீடு செய்துள்ளோம். அந்த தொகை இதுவரை கிடைக்கவில்லை. எனவே காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதையடுத்து பூசாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் சார்பில், புகார் பெட்டியில் போடப்பட்ட மனுவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பூசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

நினைவு தூண்
தமிழ்நாடு ராஜகம்பளத்து நாயக்கர் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் புகார் பெட்டியில் போட்டுச்சென்ற மனுவில் விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும். ராஜகம்பளத்து நாயக்கர் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

பழனியை சேர்ந்த ஆதரவற்ற விதவையான லதாமகேஸ்வரி என்பவர் புகார் பெட்டியில் போட்டுச்சென்ற மனுவில், சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கக்கோரி 11 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறேன். இதுவரை வேலை கிடைக்கவில்லை. எனக்கு பணியிடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் செய்திகள்