ஆண்டிப்பட்டி அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த செயலாளர் கைது
ஆண்டிப்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த செயலாளர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் போன்ற கடன்கள் வழங்கப்படுகிறது.
இந்த சங்கத்தில் கடன்பெற்ற விவசாயிகள் திருப்பி செலுத்திய தவணைத்தொகையை முறையாக கூட்டுறவு சங்க கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அங்கு தணிக்கை செய்தனர். அப்போது, 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் விவசாயிகள் செலுத்திய தவணைத்தொகையை கூட்டுறவு சங்க கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, ரூ.16 லட்சத்து 58 ஆயிரத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கணக்கில் செலுத்தாமல் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.
செயலாளர் கைது
இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன்(வயது 54) என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், அந்த பணத்தை மோசடி செய்து இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேனி மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் கூட்டுறவு துணைப் பதிவாளர் முத்துக்குமார் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயலாளர் முருகேசனை நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.