போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

தாராபுரம் அருகே கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் தாராபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-19 13:52 GMT
தாராபுரம்
 தாராபுரம் அருகே  கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் தாராபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வாலிபர் கொலை 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வீராட்சிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கோபிநாத் வயது 21.  சுமைதூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். அப்போது வெகு நேரமாகியும் கோபிநாத் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் தாராபுரத்தில் இருந்து உப்பாறு அணைக்கு செல்லும் சாலையில் மடத்துப்பாளையம் அருகே சாலையோரமாக கோபிநாத் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக  கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து வந்து கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையில் கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி கோபிநாத்தின் உறவினர்கள் நேற்று முன்தினம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 
முற்றுகை
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரதே பரிசோதனை செய்யப்பட்ட கோபிநாத்தின் உடலை  பெற்றுக்கொள்ளுமாறு அவருடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அப்போது கோபிநாத் உறவினர்கள் 200 பேர் தாராபுரம் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது போலீசார் கோபிநாத் உடலை வாங்கிக் கொள்ளுமாறு அவர்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கொலையாளிகளை கைது செய்யாமல் உடலை பெறப்போவதில்லை என போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாய் சாங் தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பிறகு உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கொலையாளிகளை பிடிக்க தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகளை பிடிப்பதாக உறுதியளித்த பின்பு கோபிநாத் உடலை பெற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து மாலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் டி.ஐ.ஜி முத்துச்சாமி தாராபுரம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து ஆய்வு செய்த பின்பு எந்த பிரச்சினைகளும் ஏற்படாதவாறு கோபிநாத் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என கூறினார்.  
-

மேலும் செய்திகள்