நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்ந்தது.

Update: 2021-07-19 13:26 GMT

கூடலூர்:
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 
அதன்படி கடந்த மாதம் அணையில் 136.15 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைந்தது. மேலும் தமிழகத்துக்கு அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கியது. கடந்த 9-ந்தேதி அணையின் நீர்மட்டம் 126 அடியாக இருந்தது. 
130 அடியாக உயர்வு
இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 129.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 324 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 4 ஆயிரத்து 665 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாற்றில் 12.8 மி.மீ. மழையும், தேக்கடியில் 15 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்