தேனியில் உயர் அழுத்த மின் வினியோகம் 50 வீடுகளில் டி.வி.க்கள் வெடித்தன பொதுமக்கள் சாலை மறியல்

தேனி அல்லிநகரத்தில் உயர் அழுத்த மின் வினியோகத்தால் 50 வீடுகளில் டி.வி.க்கள் வெடித்து பழுதானது. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2021-07-19 13:10 GMT
தேனி:
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இந்திரா நகரில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்கு நேற்று பிற்பகலில் மக்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென டமார், டமார் என டி.வி.க்கள் வெடித்தன. மேலும் டி.வி.க்களில் இருந்து புகை வெளியேறியது.
அடுத்தடுத்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி.க்கள் வெடித்ததால் அப்பகுதிகளில் சரவெடியை பற்ற வைத்தது போன்று சத்தம் எழுந்தது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் விசிறிகள் மற்றும் சில வீடுகளில் மிக்சி, ஏ.சி. போன்ற மின்சாதன பொருட்களும் ஒரே நேரத்தில் பழுதாகின. அப்பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பக்கத்து வீடுகளிலும் இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து அவர்கள் அங்குள்ள ஒரு செல்போன் கோபுரம் அருகில் திரண்டனர்.
சாலை மறியல்
கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட அந்த செல்போன் கோபுரத்துக்கு மின்வினியோகம் வழங்கியதால்தான் தங்கள் வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் அங்கு வந்தனர். மேலும் மின்வாரிய அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து மின்மாற்றியில் பராமரிப்பு பணிகள் செய்து மீண்டும் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்போது அவர்கள் ஒவ்வொரு வீட்டு இணைப்பையும் சரிபார்த்தனர்.
இதற்கிடையே பழுதடைந்த டி.வி., மிக்சி போன்ற பொருட்களை சிலர் தூக்கிக் கொண்டு வீதிக்கு வந்தனர். செல்போன் கோபுரம் அமைத்ததே இந்த பாதிப்புக்கு காரணம் என்று கூறி அந்த மக்கள், அங்கிருந்து தேனி-பெரியகுளம் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உயர் அழுத்த மின் வினியோகம்
இந்த பாதிப்பு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "பாதிக்கப்பட்ட பகுதியில் திடீரென மின்சாரம் அதிக அழுத்தத்தில் வினியோகமானதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. செல்போன் கோபுரத்துக்கும், இந்த பாதிப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. பலத்த காற்றின் போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் உயர் அழுத்த மின்சார வினியோகமாகி இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இருப்பினும் இதற்கான உண்மையான காரணங்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்