செய்முறை பயிற்சி மீண்டும் தொடக்கம்

உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செய்முறை பயிற்சி மீண்டும் தொடங்கியது.

Update: 2021-07-19 12:51 GMT
உடுமலை
உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செய்முறை பயிற்சி மீண்டும் தொடங்கியது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
உடுமலையில் எலையமுத்தூர் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்களுக்கான தங்கும் விடுதியுடன் கூடிய சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது கொழுமம் சாலையில் கண்ணமநாயக்கனூர் பிரிவில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  தொழிற்பயிற்சி நிலையம் கடந்த மார்ச் மாதம் 26ந்தேதி அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முதல் ஆண்டு மற்றும் 2வது ஆண்டு2019.2020 மற்றும் 2020.2021 கல்வி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் செய்முறை பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஊரடங்கில் அரசின் தளர்வுகளின்படி இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021/2022ம் கல்வி ஆண்டிற்கு 124 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு பதிவேற்றம் கடந்த 5ந்தேதி தொடங்கியது.
செய்முறை பயிற்சி
தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களின் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு  ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்றி முறையில் செய்முறை பயிற்சிக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி கடந்த கல்விஆண்டின் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி நேற்று மீண்டும் தொடங்கியது. இதில் மாணவமாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த செய்முறை பயிற்சி தினசரி முதல் சிப்ட் காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், 2வது சிப்ட் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் நடைபெறும். செய்முறை பயிற்சி மட்டுமே நடைபெறும்.
இந்த தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஜெஸ்டின் ஜெபராஜ் மற்றும் தொழிற்பயிற்சி அலுவலர் ரமேஷ், உதவி தொழிற்பயிற்சி அலுவலர்கள் மகாலிங்கம், செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது. 

மேலும் செய்திகள்