திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தானுக்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தானுக்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து சங்கேந்தி, தோலி, பின்னத்தூர், தேவதானம், செந்தாமரைக்கண் வழியாக அரசு பஸ் சென்று வந்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் போது இந்த பஸ் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த 10 நாட்களாக பஸ்கள் இயக்கப்பட்ட வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் அரசு பஸ் மட்டும் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- மண்ணுக்குமுண்டான், பெருவிடைமருதூர், மானங்காத்தான் கோட்டகம், நாணலூர், செந்தாமரைக்கண், தேவதானம், ஒட்டங்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், முதியோர்கள் போக்குவரத்து வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை பஸ் இயக்கவில்லை. எனவே திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தானுக்கு காலை, மதியம், மாலை ஆகிய 3 நேரமும் மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரும், திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தானுக்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.