எண்ணூர் துறைமுகம் அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் மோதி காசிமேடு மீனவர்களின் விசைப்படகு மூழ்கியது

எண்ணூர் துறைமுகம் அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் மோதி காசிமேடு மீனவர்களின் விசைப்படகு மூழ்கியது. அதில் இருந்த 7 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2021-07-18 23:08 GMT
திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு பவர்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 42) என்பவர் தலைமையில் லோகநாதன் (49), அஜித்குமார் (25), ரஞ்சித் (25), மணி (60), ராஜாக்கண்ணு (55), அரி (50) ஆகிய 7 மீனவர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

எண்ணூர் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்றபோது திடீரென விசைப்படகின் என்ஜின் பெல்ட் அறுந்து படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது. இதனால் மீனவர்கள், பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சரக்கு கப்பல் மோதியது

அப்போது எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு கப்பல், காசிமேடு மீனவர்களின் விசைப்படகு மீது மோதிவிட்டு சென்றது. கப்பல் மோதிய வேகத்தில் விசைப்படகு முற்றிலும் சேதமடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், தங்களிடம் இருந்த ‘வயர்லெஸ்’ மூலம் தங்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி விட்டது. தங்களை காப்பாற்றுங்கள் என அருகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மற்ற மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதற்குள் சேதமடைந்த விசைப்படகு கடலில் மூழ்கத்தொடங்கியது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் 7 பேரும் கடலில் குதித்து கிடைத்த பொருட்களை கையில் வைத்துக்கொண்டு நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் படகு முழுவதும் கடலில் மூழ்கியது.

7 மீனவர்கள் உயிர் தப்பினர்

இதுபற்றி தகவல் அறிந்ததும் அருகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த சகமீனவர்கள் அங்கு விரைந்து சென்று, கடலில் தத்தளித்து கொண்டிருந்த 7 மீனவர்களையும் காப்பாற்றி, தங்களது விசைப்படகில் ஏற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் கடலில் நீச்சலடித்தபடி இருந்ததால் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். இந்த விபத்தில் மீனவர் ராஜாக்கண்ணு என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உயிர் தப்பி கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களுக்கு ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. ஜே.ஜே.எபனேசர் ஆறுதல் கூறி அனைவரையும் ஆம்புலன்சு மூலம் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிக்கும்படி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்