ஈரோடு மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 23,637 பேருக்கு மதிப்பெண் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பிளஸ்-2 மாணவ -மாணவிகள் 23 ஆயிரத்து 637 பேருக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Update: 2021-07-18 21:56 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பிளஸ்-2 மாணவ -மாணவிகள் 23 ஆயிரத்து 637 பேருக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவு
கொரோனா தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவ -மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம் பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. 
இதற்கான பணிகளில் தேர்வுத்துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டன.
அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.  இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-2 தேர்வு முடிவுகளை இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. 
தேர்வு முடிவுகள் மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும், 
மேலும், www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
23,637 மாணவ -மாணவிகள்
வழக்கமாக ஒவ்வொரு தேர்வு முடிவும் முழு மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 
ஆனால் இந்த முறை எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை கணக்கிடும்போது தசம அடிப்படையில் என்ன மதிப்பெண்கள் வருகிறதோ அதை அப்படியே மாணவர்களுக்கு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 ஆயிரத்து 512 மாணவிகளும், 11 ஆயிரத்து 125 மாணவர்களும் என மொத்தம் 23 ஆயிரத்து 637 பேர் பிளஸ்-2 படித்து வந்தனர். 
இதில் ஈரோடு கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 633 மாணவிகளும், 4 ஆயிரத்து 7 மாணவர்களும் என மொத்தம் 8 ஆயிரத்து 640 பேரும், கோபி கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 210 மாணவிகளும், 1,881 மாணவர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 91 பேரும், பவானி கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 546 மாணவிகளும், 2 ஆயிரத்து 506 மாணவர்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 52 பேரும், பெருந்துறை கல்வி மாவட்டத்தில் 1,457 மாணவிகளும், 1,440 மாணவர்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 897 பேரும், சத்தியமங்கலம் கல்வி மாவட்டத்தில் 1,666 மாணவிகளும், 1,291 மாணவர்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 957 பேரும் பிளஸ்-2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். 
இவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் இன்று வெளியாகிறது.

மேலும் செய்திகள்