தொடர்மழை காரணமாக குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு
தொடர்மழை காரணமாக குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொள்ளாச்சி
தொடர்மழை காரணமாக குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளப்பெருக்கு
பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதுடன், அங்குள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.
மேலும் ஆழியாறு அருகே உள்ள சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
வனத்துறையினர் கண்காணிப்பு
ஏற்கனவே இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், அங்கு செல்லும் வழியில் இந்த அருவி இருக்கிறது.
எனவே அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.