நடுவட்டத்தில் அதிகபட்சமாக 74 மி.மீட்டர் மழை
நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் நடுவட்டத்தில் அதிகபட்சமாக 74 மி.மீட்டர் பதிவானது.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் நடுவட்டத்தில் அதிகபட்சமாக 74 மி.மீட்டர் பதிவானது. மேலும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. பலத்த காற்று குறைந்ததால் பாதிப்பில்லை.
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குன்னூர்-கோத்தகிரி சாலை பெட்போர்டு பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் இரு புறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
நடுவட்டத்தில் 74 மி.மீட்டர்
நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக நடுவட்டத்தில் 74 மி.மீட்டரும், கிளன்மார்கனில் - 64 மி.மீட்டரும் மழை பதிவானது. நடுவட்டம், கிளன்மார்கன் பகுதியில் தொடர் பலத்த மழையால் பைக்காரா, காமராஜர் சாகர் அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல் கூடலூர் பாண்டியாறு, மாயாறு, ஓவேலி சுண்ணாம்பு பாலம் ஆறு உள்பட அனைத்து ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக ஊட்டி, குன்னூர், நடுவட்டம், ஓவேலி, தேவாலா அப்பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையளவு
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
நடுவட்டம்-74, கிளன்மார்கன்-64, கூடலூர்-29, அப்பர் பவானி-27, கோடநாடு-26, அவலாஞ்சி-25, கல்லட்டி-23, ஓவேலி-19, பந்தலூரில்-17.4, கீழ் கோத்தகிரி-17, தேவாலா, உலிக்கல் தலா-15, பாடந்தொரை-14, ஊட்டி-14, குன்னூர்-13, சேரங்கோடு-11 மழையும் பதிவானது.