நல்லம்பள்ளியில் சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

நல்லம்பள்ளியில் சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-18 16:20 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளியில் சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேறும், சகதியுமான சாலை
நல்லம்பள்ளியில் வாரச்சந்தை வளாகப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். 
தற்போது பெய்து வரும் மழைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சாலை சிறு மழை பெய்தாலே சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்ல முறையான சாலை வசதி செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
எனவே கர்ப்பிணிகள், பொதுமக்கள் நலன் கருதி நல்லம்பள்ளி வாரச்சந்தை வளாக பகுதிக்கு முறையான சாலை வசதிகள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்