பூண்டி ஏரியில் 1 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு 7 மாதத்துக்கு குடிநீர் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல்
சென்னை மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீ்ர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பூண்டி ஏரியில் 1 டி.எம்.சி. வரை தண்ணீர் சேகரிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 7 மாதத்துக்கு குடிநீர் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
சென்னை,
சென்னை மாநகர பகுதிகளுக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. இதில் பூண்டி ஏரிக்கு, தமிழக அரசும், ஆந்திர மாநில அரசும் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் வருகிறது. இங்கிருந்து ஒவ்வொரு ஏரிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது ஆந்திர மாநில அரசு திறந்துவிட்டுள்ள கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு நேற்றைய நிலவரப்படி 692 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. இதுதவிர ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு மழை நீரும் வந்து கொண்டு இருக்கிறது.
ஏரிகளில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 72 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. அதேபோல் சோழவரம்-35 மி.மீ, புழல்- 22 மி.மீ., கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை-10 மி.மீ., செம்பரம்பாக்கம்-26 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர தாமரைப்பாக்கம்-55 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு-7 மி.மீ., நுங்கம்பாக்கம் 60.5மி.மீ., மீனம்பாக்கம் 16.4 மி.மீ. என்ற அளவில் மழை பதிவானது.
அதனடிப்படையில் ஏரிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் 692 கன அடி நீருடன், மழை நீர் 279 கன அடி சேர்த்து மொத்தம் 971 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் சோழவரம் ஏரிக்கு 75 கன அடியும், புழல் ஏரிக்கு 330 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 10 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 520 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
குடிநீருக்காக பூண்டி ஏரியில் இருந்து 24 கன அடி, சோழவரம் ஏரியில் இருந்து 10 கனஅடி, புழல் ஏரியில் இருந்து 159 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 5 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 151 கன அடி திறக்கப்படுகிறது.
ஏரிகளின் இருப்பை பொருத்தவரையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொற்ப அளவிலேயே இருந்த பூண்டி ஏரியில் தற்போது 1,011 மில்லியன் கன அடி (1 டி.எம்.சி.) நீர் சேகரிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் சோழவரம் ஏரியில் 582 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 613 மில்லியன் கன அடி (2.6 டி.எம்.சி.), கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 431 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 600 மில்லியன் கன அடி (2.6 டி.எம்.சி.) உள்பட 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 7 ஆயிரத்து 96 மில்லியன் கன அடி (7 டி.எம்.சி.) இருப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 4 ஆயிரத்து 796 மில்லியன் கன அடி (4.7 டி.எம்.சி.) இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பருவத்தில் எப்படியும் 9 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
போதிய நீர் இருப்பு இருப்பதால் தற்போது சென்னை மாநகருக்கு 850 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து 7 மாதங்களுக்கு வினியோகம் செய்வதற்கான நீர் தற்போது கையிருப்பு உள்ளது. இந்த அளவு வரும் நாட்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகரிகள் தெரிவித்தனர்.