திருவெறும்பூர் அருகே மின்கசிவால் வீட்டில் தீவிபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
திருவெறும்பூர் அருகே மின்கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆனது.
திருவெறும்பூர்,
திருவெறும்பூர் அருகே மின்கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆனது.
காய்கறி வியாபாரி
திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சியில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆழப்பனின் மகன் பாஸ்கர் (வயது 37). இவருடைய மனைவி பொன்மொழி(31). இவர்களுக்கு தருணிகா(6), ரித்திக்பவன்(4) மற்றும் தமிழினி என்ற 6 மாத குழந்தை என்று 3 குழந்தைகள் உள்ளன.
பாஸ்கர் வீதி, வீதியாக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் காய்கறி வியாபாரத்துக்கு பாஸ்கர் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு பொன்மொழி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
தீ விபத்து
அப்போது, நள்ளிரவில் திடீரென வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதனால் தீ வீடு முழுவதும் பரவ தொடங்கியது. குழந்தை தமிழினி தூங்கிக்கொண்டிருந்த தொட்டிலிலும் தீ பிடித்தது.
இதைப்பார்த்து பதறி எழுந்த பொன்மொழி, தனது குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பொருட்கள் எரிந்து நாசம்
இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள், கட்டில், பீரோ, துணிகள் என்று அனைத்தும் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.