நகராட்சி குப்பை கிடங்குகளில் பசுமை தீர்ப்பாய தலைவர் ஆய்வு
கூடலூர், ஊட்டியில் நகராட்சி குப்பை கிடங்குகளில் பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி ஆய்வு நடத்தினார்.
கூடலூர்
கூடலூர், ஊட்டியில் நகராட்சி குப்பை கிடங்குகளில் பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி ஆய்வு நடத்தினார்.
குப்பை கிடங்கில் ஆய்வு
கூடலூர் நகராட்சி பகுதியில் தினமும் சேரக்கூடிய குப்பை கழிவுகள் 27-வது மைல் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கொட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் குப்பை கிடங்கு செயல்பட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தலைவர் ஜோதிமணி நேற்று காலை 11 மணிக்கு கூடலூர் 27-வது மைல் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் பசுமை தீர்ப்பாய தலைவரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். இப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் நீராதாரம் பாதிக்கப்படுகிறது.
இதனால் குடிநீர் மாசு அடைகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி அந்த வழியாக செல்லும் சாலையை அடைந்து விட்டதாக புகார் தெரிவித்தனர்.
குடிநீர் இணைப்புகள் வழங்க பரிந்துரை
இதைக் கேட்ட பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்க மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரைத்தார். தொடர்ந்து சாலையை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கும் படி உத்தரவிட்டார்.
பின்னர் காய்கறி, பழைய துணிகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இயற்கை உரமாக மாற்றுவது குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்ட கூடாரங்களில் வரக்கூடிய துர்நாற்றத்தை வெளியேற்றும் மின்விசிறிகளை பொருத்தும்படி உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் லிவிங்ஸ்டன், தாசில்தார் சிவக்குமார் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
யாருக்கும் பாதிப்பு இல்லை
1 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது. குடிநீர் மாசடைகிறது என பல புகார்கள் தெரிவித்தனர்.
இதனால் குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இப்பகுதியிலுள்ள 400 பேருக்கு நகராட்சி மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நகராட்சி குப்பை கிடங்கினால் துர்நாற்றம் இருப்பதாக தெரியவில்லை.
குப்பைக் கிடங்கு செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் கூடலூர் மக்கள் வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் உடனடியாக கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படும். எப்படி இருந்தாலும் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பேண வேண்டிய பொறுப்பு உள்ளது.
இங்கு செயல்படும் குப்பை கிடங்கால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் குன்னூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளை தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊட்டி
இதேபோல ஊட்டி நகராட்சி குப்பை கிடங்கில் ஆய்வு செய்தார். அப்போது விளைநிலங்களுக்குள் கழிவுநீர் செல்லாமல் இருக்க வடிகாலுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, கழிவுநீரை தேக்கி வைக்க டேங்க் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.
ஆய்வின்போது ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ரவிச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தார்.