வீடு புகுந்து 23 பவுன் நகை கொள்ளை
மெஞ்ஞானபுரம் அருகே வீடு புகுந்து 23 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே பட்டப்பகலில் தொழிலாளியின் வீடு புகுந்து 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலி தொழிலாளர்கள்
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அச்சம்பாடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 40). இவருடைய மனைவி ராஜேசுவரி (36).
கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். இவர்களுடைய 2 குழந்தைகளும், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் புத்தகங்கள் வாங்குவதற்காக சென்றனர்.
ராேஜசுவரி வேலைக்கு புறப்பட்டு சென்றபோது, தனது வீட்டின் கதவை பூட்டி, அதன் சாவியை வீட்டு வளாகத்தில் உள்ள ஆட்டுக்கல்லின் அடியில் மறைத்து வைத்து சென்றார்.
23 பவுன் நகை கொள்ளை
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், சுந்தர்ராஜின் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து, அங்கு கொள்ளை அடிக்க திட்டமிட்டனர். அதன்படி வீட்டின் வளாகத்தில் ஆட்டுக்கல்லுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.
பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.42 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மாலையில் வீட்டுக்கு வந்த ராஜேசுவரி கதவு திறந்து கிடந்ததையும், நகைகள்- பணம் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள், பணத்ைத கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.