பெண் குழந்தை சாவில் சித்தி அதிரடி கைது
விழுப்புரத்தில் பெண் குழந்தை சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு நாடகமாடிய சித்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷமிலுதீன் (வயது 33), இவரது குழந்தை நசீபா (2½). இக்குழந்தை பிறந்ததும் தாய் நஸ்ரீன் இறந்துவிட்டார். அதன் பிறகு நசீபாவை ஷமிலுதீனின் தங்கை வளர்த்து வந்தார். கடந்த 2019-ல் ஷமிலுதீன் அப்ஷானா (20) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக ஷமிலுதீன், அவரது 2-வது மனைவி அப்ஷானா ஆகியோருடன் நசீபா வளர்த்து வந்தாள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை நசீபா, வீட்டிலேயே இறந்து கிடந்தாள். இதுகுறித்து ஷமிலுதீன் தங்கையின் கணவர் முகமதுஜாகீர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், குழந்தை நசீபாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை, சித்தியான அப்ஷானா மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அப்ஷானாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்ததால் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
குழந்தை நசீபாவின் தாய் இறந்ததும் குழந்தையை அவரது அத்தை 1½ ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். பின்னர் ஷமிலுதீன் 2-வது திருமணம் செய்து கொண்டதும் அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் அவரிடமே நசீபாவை அவளது அத்தை ஒப்படைத்துள்ளார். இதனிடையே அப்ஷானாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் தனது குழந்தையை வளர்ப்பதிலேயே அவர் முழு கவனத்தையும் செலுத்தி வந்துள்ளார். ஆனால் நசீபா, தாய் இல்லாத ஏக்கத்தில் சித்தி அப்ஷானாவிடமே சென்று சிறு, சிறு சேட்டைகளை செய்து வந்துள்ளது. நசீபாவினால் தனது குழந்தையை சரிவர கவனிக்க முடியவில்லை என்று அப்ஷானாவிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
கழுத்தை நெரித்துக்கொன்றார்
சம்பவத்தன்று ஷமிலுதீன் வீட்டில் இல்லாத சமயத்தில் அப்ஷானா, குழந்தை நசீபாவின் வாயை பொத்தி கையால் தாக்கியுள்ளார். மேலும் நசீபாவின் கழுத்தை கையால் நெரித்துக்கொன்றுள்ளார். இதை மறைப்பதற்காக நசீபா, தண்ணீர் குடிப்பதற்காக சிலாப்பில் ஏறியபோது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக அப்ஷானா நாடகமாடியுள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நசீபா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார், அப்ஷானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.