ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் திருட்டு

விழுப்புரத்தில் ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் திருடு போனது.

Update: 2021-07-17 16:54 GMT
விழுப்புரம், 
வானூர் தாலுகா பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் சக்திதாசன் (வயது 30). ஆடிட்டரான இவர், விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தனியார் கம்பெனி ஆடிட்டிங் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை அந்த வணிக வளாகத்தில் கடை வைத்திருக்கும் சிலர் கடையை திறக்க வந்தபோது சக்திதாசனின் அலுவலக மேற்கூரையான சிமெண்டு சிலாப் பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். 
உடனே இதுபற்றி அவர்கள், சக்திதாசனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அவர், விழுப்புரத்தில் உள்ள அலுவலகத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த மர பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், அலுவலகத்தின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சக்திதாசன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்