விதிகளை மீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
விதிகளை மீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ் விதிகளை மீறி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோரி க்கை விடுத்துள்ளனர்.
4 வழிச்சாலை மேம்பாலம்
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு கிணத்துக்கடவு வழியாக 4 வழிச்சாலை போடப்பட்டு உள்ளது. இதில், கிணத்துக்கடவு ஊருக்குள் 2.5 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதில் மேம்பாலத்தின் கீழ் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வாகனங்கள் செல்ல வசதியாக கிணத்துக்கடவு பஸ்நிலையம், பொன்மலை வேலாயுதசாமிகோவில் ஆகிய பகுதிகளில் இடைவெளி விடப்பட்டு உள்ளது. அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதில், பொன்மலைவேலாயுதசாமி கோவில் அருகே சாலையை கடக்க போடப்பட்ட இடைவெளி வழியாக பொள்ளாச்சியில் இருந்து வரும் வாகனங்கள் கொண்டம்பட்டி, வடசித்தூர், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் வேலாயுத சாமி கோவில் எதிரே கொண்டம்பட்டி செல்லும் சாலை அருகே நிறுத் தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இதனால் அங்கு காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விபத்து அபாயம்
மேலும் கொண்டம்பட்டி, பல்லடம் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்களும் ஆர்.எஸ்.ரோட்டில் இருந்து கோவைக்கு செல்ல கிணத்துக்கடவு பஸ் நிலையம் சென்று திரும்பி தான் சொல்ல வேண்டும்.
ஆனால் தற்போது அனைத்து வாகனங்களும் ஆர்.எஸ் ரோட்டில் இருந்து வலது புறமாக மெயின்ரோட்டில் திரும்புவதால் கிணத்துக்கடவு பஸ்நிறுத்தம் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதை தடுக்க கிணத்துக்கடவு 4 வழிச்சாலையில் உள்ள தூணில் போலீசார் நோஎண்டரி என ஆங்கிலத்தில் எழுதி வைத்து உள்ளனர்.
அதையும் மீறி வாகன ஓட்டிகள் கிணத்துக்கடவு பஸ்நிலையம் சென்று திரும்புவதற்கு பதிலாக ஆர்.எஸ்.ரோட்டில் இருந்து வலதுபுறத்தில் திரும்புகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கண்காணிக்க வேண்டும்
எனவே போக்குவரத்து விதிகளை மீறி காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க கிணத்துக்கடவு போலீசார் கிணத்துக்கடவு பஸ்நிறுத்தத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.