குடிநீர் கேட்டு இளைஞர்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி அருகே குடிநீர் கேட்டு இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-17 16:50 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே தொரவி காலனி மக்களுக்கு அதே ஊரில் பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த தண்ணீர், அவர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே குடிநீர் வழங்கும் வகையில் புதிதாக வராக நதி ஆற்றுப்பகுதியில் திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து தொரவி காலனிக்கு குடிநீர் கொண்டு வரும் வகையில் குழாய் பதிக்கவில்லை. 
இந்த நிலையில் நேற்று மதியம் மக்கள் அதிகாரம் தலைவர் ராஜீவ்காந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடிநீர் வழங்கக்கோரி வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை 

இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், சரவணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர வடிவேல், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது இளைஞர்கள், வராக நதி ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கிணற்றில் இருந்து குழாய் பதித்து குடிநீர் வழங்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இளைஞர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வழுதாவூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்