போலீஸ் அதிகாரிகளின் புகைப்படங்களுடன் செல்போன் எண்; பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடு

பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அதிகாரிகள், போலீசாரின் புகைப்படங்களுடன் செல்போன் எண் கொண்ட விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-17 16:23 GMT
திண்டுக்கல்:
பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அதிகாரிகள், போலீசாரின் புகைப்படங்களுடன் செல்போன் எண் கொண்ட விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொடர்பு கொள்ள... 
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 36 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் என மொத்தம் 42 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களின் தொலைபேசி எண், துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோரின் செல்போன் எண் ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு புகார், தகவல்களை தெரிவிக்கும்படி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பொதுமக்கள் தங்களிடம் பேசிய அதிகாரியின் பெயரை கேட்டு தான் தெரிந்து கொள்ள முடியும். மேலும் அந்த அதிகாரியை நேரில் பார்த்தால் மட்டுமே அடையாளம் காணும் நிலை இருந்தது. இது ஒருசில நேரம் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்து விடுகிறது. இதை தவிர்க்கவும், முக்கிய அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலையத்தில் இருக்கும் அனைத்து பிரிவு போலீசாரையும் மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் புகைப்படம், பெயர் ஆகியவற்றுடன் விளம்பர பலகை வைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.
புகைப்படத்துடன் செல்போன் எண்
அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புதிதாக விளம்பர பலகை வைக்கப்படுகிறது. அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு ஆகியோரின் பெயர், அவர்களின் செல்போன் எண், மாவட்ட தனிப்பிரிவு அலுவலக செல்போன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதுதவிர சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், நிலைய எழுத்தர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய உரிய அலுவலர், நிலைய வரவேற்பு அலுவலர், கணினி ஆபரேட்டர், காணாமல் போகும் நபர்களை பற்றிய உரிமை அலுவலர் என இதர பிரிவு போலீசாரின் புகைப்படம், பெயர், செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இதன்மூலம் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட பிரிவு போலீசார் அல்லது அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசலாம். அதோடு தங்களிடம் பேசிய போலீசார் யார்? என்பதையும் அறிந்து கொள்ளலாம் என்று போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்