தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்
விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் திருத்தணி மற்றும் பொன்னேரி பகுதிகளில் திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேற்படி பகுதிகளை சேர்ந்த 623 நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக தேவையான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைய தள முகவரியான www.kccb.co.in என்ற இணையதளத்தில் இருந்து உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேலே குறிப்பிட்டவாறு சங்கத்தில் நேரில் அளிக்கலாம். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி சங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.