ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி:
தென்காசி மங்கம்மா சாலை பகுதியைச் சேர்ந்தவர் துரை மகன் கார்த்திக் (வயது 24). இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட சில வழக்குகள் உள்ளன. தென்காசி கீழ பேட்டை தெருவைச் சேர்ந்தவர் பீர் முகம்மது மகன் பாதுஷா (41). செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது மகன் முகம்மது அலி (31). இவர்கள் இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்தனர். இவர்கள் 3 பேரையும் தென்காசி போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கார்த்திக், பாதுஷா, முகம்மது அலி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கார்த்திக் உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை சிறையில் போலீசார் ஒப்படைத்தனர்.
கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தைச் சேர்ந்தவர் முகம்மது மீத்தின் (53). இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று முகம்மது மீத்தினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை சிறையில் போலீசார் ஒப்படைத்தனர்.
இதேபோல ஆய்க்குடியைச் சேர்ந்த பாண்டி மகன் பாண்டியராஜ் என்ற பாஸ்கர் (41) மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.