கர்நாடகத்திற்கு மாதம் 1½ கோடி டோஸ் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் - மோடியிடம் எடியூரப்பா கோரிக்கை
கொரோனா 3-வது அலையை தடுக்க கர்நாடகத்திற்கு மாதம் 1½ கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு:
ஆலோசனை கூட்டம்
நாட்டில் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கேரளாவில் மட்டும் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இது மத்திய அரசுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பிற மாநிலங்களில் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கர்நாடகம் உள்பட சில மாநிலங்களுடன் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி கலந்து கொண்டார். இதில் துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளி, தலைமை செயலாளர் ரவிக்குமார், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் குறைந்தது
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் நமது நாட்டிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும். சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்" என்றார்.
அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. பெங்களூருவில் பாதிப்பு 400 என்ற அளவில் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பு விகிதம் 1.42 சதவீதமாக உள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 1.25 ஆக இருக்கிறது. கர்நாடகத்தில் இதுவரை 2.62 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
3-வது அலையை எதிர்கொள்ள...
கர்நாடகத்திற்கு தினசரி 5 லட்சம் டோஸ் வீதம் மாதம் 1½ கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். கொரோனா பாதிப்பு விகிதம், தொற்று பரவல் எண்ணிக்கை மற்றும் நிபுணர் குழுவின் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கை சுவாச கருவிகளான வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்படுத்துவது, குழந்தைகள் ஐ.சி.யு. படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது போன்ற நடவடிக்கைககள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
தேவையான உபகரணங்கள்
டாக்டர்கள், நர்சுகள், ஆய்வு கூட பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள் போன்றவை அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்கவங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பது, மரபணு ஆய்வங்களை அமைப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிப்பதுடன் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 800 வென்டிலேட்டர்களை பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தாலுகா ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க உதவ வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.