‘நடிகர் தர்ஷன் விவகாரத்திற்குள் என்னை ஏன் இழுக்கிறீர்கள்’ - குமாரசாமி வேதனை
நடிகர் தர்ஷன் விவகாரத்திற்குள் என்னை ஏன் இழுக்கிறீர்கள் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
குமாரசாமி மறுப்பு
நடிகர் தர்ஷன் மைசூருவில் ஓட்டல் ஊழியர் ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அவரது பெயரில் ஒரு பெண் ரூ.25 கோடி வங்கி கடன் பெற முயற்சி நடந்தாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 2 விவகாரங்களில் தர்ஷன் சிக்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்ஷன் ஓட்டல் ஊழியரை தாக்கினார் என்ற தகவலை திரைப்பட இயக்குனர் இந்திரஜின் லிங்கேஷ் பகிரங்கப்படுத்தினார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியை இந்திரரஜித் லங்கேஷ் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் மூலம் தர்ஷன் விவகாரத்தில் குமாரசாமி பின்னால் இருந்து செயல்படுவதாகவும் ஒரு கருத்து பரவி வருகிறது. இதை குமாரசாமி மறுத்துள்ளார்.
தொடர்பு கிடையாது
இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நீண்ட நாட்களுக்கு முன்பு இந்திரஜித் லங்கேஷ் என்னை சந்தித்து பேசினார். அவர் அடிக்கடி என்னை சந்தித்து பேசுவது உண்டு. அந்த புகைப்படத்தை சிலர் தற்போது பரப்பி வருகிறார்கள். நடிகர் தர்ஷன் விவகாரத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த விவகாரத்திற்குள் என்னை ஏன் இழுக்கிறீர்கள். நான் எப்போதும் நேரடியாக அரசியல் செய்பவன்" என்றார்.