உணவக ஊழியரை நடிகர் தர்ஷன் தாக்கியதாக புகார் - மைசூரு ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை
மைசூரு ஓட்டல் ஊழியரை நடிகர் தர்ஷன் தாக்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
பெங்களூரு:
நடிகர் தர்ஷன் தாக்கியதாக புகார்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இந்த நிலையில் தர்ஷன் கொரோனா ஊரடங்கின் போது மைசூருவில் உள்ள சந்தேஷ் பிரின்ஸ் ஓட்டலில் நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்டார். அப்போது ஓட்டல் ஊழியரான கங்காதர் என்பவரை தாக்கியதாகவும், எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படியும் கன்னட திரைப்பட இயக்குனரும், சமூக ஆர்வலருமான இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
மேலும் இதுதொடர்பான புகார் மனுவை அவர் மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மையிடம் வழங்கியிருந்தார். அவர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தும்படி மைசூரு மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டார்.
போலீசார் அதிரடி சோதனை
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மைசூரு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உதவி போலீஸ் கமிஷனர் சசிதர் தலைமையில் போலீசார் சந்தேஷ் பிரின்ஸ் ஓட்டலுக்கு சென்றனர்.
நடிகர் தர்ஷன், ஓட்டல் ஊழியரை தாக்கியது பற்றியும் அவரிடம் போலீசார் கேள்வி கேட்டு தகவலை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து போலீசார் ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் எத்தனை என்றும், கடந்த 5 மாதங்களுக்கான கண்காணிப்பு கேமரா காட்சிகளை காட்டும்படி ஊழியர்களிடம் கேட்டனர்.
அதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சோதனை மாலை வரை நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிராமண வகுப்பு
இந்த நிலையில் ஓட்டலின் ஊழியர் கங்காதரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன் அல்ல. நான் பிராமண வகுப்பை சேர்ந்தவன் என்றும் கூறியுள்ளார். மேலும் என்னை நடிகர் தர்ஷன் தாக்கவில்லை.
சம்பவத்தன்று எங்கள் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் நடந்தது. இதுதான் உண்மை என்றார். இயக்குனர் இ்ந்திரஜித், ஓட்டல் ஊழியர் கங்காதர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.