தேசூர் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து டிரைவர் சாவு

தேசூர் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்ததில் சென்னையை சேர்ந்த டிரைவர் பலியானார்.

Update: 2021-07-16 18:20 GMT
சேத்துப்பட்டு
கார் டிரைவர்

சென்னை மவுலிவாக்கத்தில் வசித்த சந்திரசேகர் மகன் மணிகண்டன் (வயது 34), கார் டிரைவராக பணியாற்றி வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தேசூர் பகுதியில் உள்ள திரக்கோவிலுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு வந்தார். பின்னர் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென கார் பழுதானது. மெக்கானிக்கை வரவழைத்து காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய அனுப்பி வைத்தார். பின்னர் சென்னைக்கு திரும்பிய அவர் காரை எடுப்பதற்காக நண்பர் ராஜேசுடன் (30) மோட்டார்சைக்கிளில் வந்தார். 

சரி செய்யப்பட்ட காரில் மணிகண்டன் சென்னைக்கு புறப்பட்டார். தேசூர் வழியாக வரும்போது வளைவில் கார் திரும்பியது. அப்போது நிலைதடுமாறிய கார் சாலையோர நிலத்துக்குள் இறங்கி கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது. 

அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். அவரை கிணற்றுக்குள் இறங்கி உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.  
விசாரணை

இது குறித்து தேசூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்