லோடு ஆட்டோ- மோட்டார்சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் சாவு
விளாத்திகுளம் அருகே லோடு ஆட்டோ- மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் போலீஸ்காரர் இறந்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே லோடு ஆட்டோவும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ்காரர்
விளாத்திகுளத்தை அடுத்து சூரங்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகவேல் (வயது 26). இவர் தருவைகுளம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று தனது மோட்டார்சைக்கிளில் தங்கம்மாள்புரம் கிராமத்தில் நடந்த உறவினரின் திருமண விழாவிற்கு சென்று விட்டு தருவைகுளம் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
கிழக்கு கடற்கரை சாலையில் வடக்கில் இருந்து தெற்காக பாலார்பட்டி விலக்கு அருகில் சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் சம்பவ இடத்திலேயே கனகவேல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
போலீஸ்காரர் கனகவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவர் சிவகங்கை மாவட்டம் வாகைநேரி சாந்தி வீதி ரங்கசாமி தெருவை சேர்ந்த குருசாமியை (49) கைது செய்தனர்.