சின்னவெங்காய விதைகள்
தாராபுரம் தோட்டக்கலை துறையினருக்கு வழங்கப்பட்ட சின்ன வெங்காய விதைகள் இடைத்தரகர்களிடம் சென்றது எப்படி என்பது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரம்
தாராபுரம் தோட்டக்கலை துறையினருக்கு வழங்கப்பட்ட சின்ன வெங்காய விதைகள் இடைத்தரகர்களிடம் சென்றது எப்படி என்பது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ன வெங்காய விதை
தாராபுரம், குண்டடம் சுற்றுவட்டார கிராமங்களான நவநாரி, பெல்லம்பட்டி, கள்ளிவலசு, மருதூர், பனமரத்து பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடர் மழையினால் நடப்பட்ட வெங்காயம் முளைத்து தண்ணீரில் அழுகியது. இதனால் இந்த ஆண்டு வெங்காய விதைக்கு தாராபுரம் வட்டார பகுதியில் கிராக்கி ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தாராபுரம் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வெங்காய விதைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தோட்டக்கலைதுறையினர் அரசிடமிருந்து விதை கொள்முதல் செய்தனர். அவ்வாறு செய்யப்பட்ட சின்ன வெங்காய விதைகள் கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கப்பட்டது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் மானிய விலையில் வழங்கப்பட வேண்டும். ஆனால் தோட்டக்கலைத்துறையினர் சின்னவெங்காயம் விதைகளை இடைத்தரகர்களுக்கு குறிப்பிட்ட லாபத்தை வைத்து விற்பனை செய்துள்ளனர்.
நடவடிக்கை
அவ்வாறு தோட்டக்கலை துறை மூலம் வாங்கிய இடைத்தரகர்கள் விதை பாக்கெட் மீது தங்களது நிறுவன பெயர் பொரித்த ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்துள்ளனர். ஆனால் தோட்டக்கலை துறையினரிடமிருந்து விலைக்கு வாங்கிய தனியார் நிறுவனம் விவசாயிகளுக்கு 7 மடங்கு விலை உயர்வு வைத்து லாபத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து கலெக்டர் வினீத் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.