மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் 600 பேர் கைது
மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் 600 பேர் கைது
கோவை
கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்கள் இடிப்பு
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதில் குளக்கரையில் இருந்த கோவில்களும் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் தலைமை யில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஒப்பணக்கார வீதி, லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் இருந்து மாநக ராட்சி அலுவலகத்திற்கு செல்லும் சாலை தடுப்பு வைத்து அடைக்கப் பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
முற்றுகையிட முயற்சி
இதற்கிடையே இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காலை முதல் டவுன்ஹால் பகுதியில் குவிந்தனர்.
மாநகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் மணிக்கூண்டு அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள், அங்கேயே முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும் போது, நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, 75 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை இடிக்கக்கூடாது என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.
அதை மீறி கோவையில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவில்களை அதிகாரிகள் இடித்து உள்ளனர்.
600 பேர் கைது
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இந்து கோவில்கள் மட்டும் இடிக்கப்படுகின்றன. இது இந்துக்களின் மனதை காயப்படுத்துகிறது.
பிற மதத்தவர்கள் ஆக்கிரமித்து வழிபாட்டு தலங்கள் கட்டினால் அகற்றுவது இல்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. மாநகராட்சி தொடர்ந்து இந்து கோவில்களை இடித்து அகற்றினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் கிஷோர் குமார், மாவட்ட தலைவர் தசரதன், செய்தி தொடர்பாளர் தனபால், கோட்ட செயலாளர் சதீஸ், ஜெய்சங்கர் உள்பட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
தள்ளுமுள்ளு
அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது. இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் காரணமாக மசூதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.