ரெயிலில் அடிபட்டு இறந்த 16 பேர் குறித்து விசாரிக்க தனிப்படை

திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயிலில் அடிபட்டு இறந்த 16 பேரை அடையாளம் காண முடியாததால் தனிப்படை அமைத்து விசாரிக்கப்படுகிறது.

Update: 2021-07-16 15:59 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயிலில் அடிபட்டு இறந்த 16 பேரை அடையாளம் காண முடியாததால் தனிப்படை அமைத்து விசாரிக்கப்படுகிறது.
ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு
தமிழகத்தில் ரெயிலில் அடிபட்டு மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது, ஆளில்லாத ரெயில்வே கேட்டில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடப்பது, ரெயில்வே கேட் மூடினால் அதற்குள் நுழைந்து கடக்க முயற்சிப்பது, காட்டு பகுதியில் தண்டவாளத்தின் அருகில் அமர்ந்து மது குடிப்பது போன்ற அத்துமீறல்களால் ரெயிலில் அடிபட்டு மக்கள் இறக்கின்றனர்.
அதேபோல் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்தும், ரெயில் முன்பு பாய்ந்தும் உயிரை மாய்த்து கொள்பவர்களும் உண்டு. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். ஆனால் ஒருசில நேரங்களில் ரெயிலில் அடிபட்டு இறப்பவர்கள் யார்? என்றே தெரியாமல் போய் விடுகிறது.
விசாரிக்க தனிப்படை 
அந்த வகையில் மாநிலம் முழுவதும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த பலர் பற்றிய விவரங்கள் கிடைக்காமல், அடையாளம் காணமுடியாமல் உள்ளது. இதனால் அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மாநிலம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, கொடைரோடு ஆகிய பகுதிகளில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்களில் 16 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
எனினும் 16 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ரெயில்வே போலீசார் மூலம் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே அந்த 16 பேர் குறித்தும் விசாரணை நடத்துவதற்கு திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தனிப்படை போலீசார் 16 பேர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்