குஜிலியம்பாறையில் கோவில் பூசாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

குஜிலியம்பாறையில் கோவில் பூசாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருடுபோனது.

Update: 2021-07-16 15:51 GMT
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறையை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58). கோவில் பூசாரி. இவர்  வெளியூரில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் குஜிலியம்பாறை அருகே தங்கராஜின் குல தெய்வ கோவிலான அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வெள்ளி பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, தங்கராஜின் மனைவி கலைவாணி மற்றும் குழந்தைகள் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். 
இந்தநிலையில் தங்கராஜின் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த வெள்ளி கிரீடம், கொலுசு, வெள்ளி செம்பு உள்ளிட்ட 1¾ கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் பீரோவில் வைத்திருந்த தங்க மோதிரம், தாலி உள்பட 6 கிராம் தங்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதற்கிடையே நேற்று காலை பூஜை பொருட்களை எடுப்பதற்காக தங்கராஜின் தம்பி சவுந்தரபாண்டியன் அங்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். 
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வெள்ளி பொருட்கள் மற்றும் தங்கம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சவுந்தரபாண்டியன், குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்