பெரும்பாறை அருகே மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மலைக்கிராமங்கள்
பெரும்பாறை அருகே மின்சாரம் துண்டிப்பால் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின.
பெரும்பாறை:
பெரும்பாறை அருகே கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, பட்டலங்காடு பிரிவு, கானல்காடு, தடியன்குடிசை, கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 14-ந்தேதி இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததுடன், மின்கம்பிகள் அறுந்தன.
இதனால் தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்பட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் நேற்று வரை மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக இந்த மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின.
எனவே மின்கம்பிகளை சீரமைத்து மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.