வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம்

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

Update: 2021-07-16 14:36 GMT
வடமதுரை:
வடமதுரையில் சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தொடர்ந்து 13 நாட்கள் ஆடி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் முதல் நாளான கொடியேற்றம் அன்று பல்வேறு மண்டகப்படிதாரர்களின் கலை நிகழ்ச்சிகளோடு பெருமாள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் கோவிலில் ஆடி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் கோவில் பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சன்னதியை வந்தடைந்தது. பின்னர் கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். அப்போது பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 22-ந்தேதியும், முத்துப்பல்லக்கு ஊர்வலம் 26-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் மாலதி ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்