பனியன் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
பனியன் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேரை கைது செய்தனர்.
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 26). இவர் அதே பகுதியில் தனது அண்ணன் மணிகண்டனுடன் (30) சேர்ந்து பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தினேஷின் நண்பர்கள் அதே ஊரைச்சேர்ந்த டிரைவர் கருப்பணசாமி (26), திருமூர்த்தி (26) மற்றும் கணேஷ் (26). இவர்கள் 3 பேரும் தினேசுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தினேசிடம் இருந்து பிரிந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் தினேசுக்கும், ஒரு 30 வயது பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக கூறி, தினேசை மிரட்டி டிரைவர் கருப்பணசாமி தொடர்ந்து ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.21 ஆயிரம் என பலமுறை பணம் பறித்துள்ளார். மேலும் அந்த பெண்ணையும் மிரட்டி ரூ.10 ஆயிரம் பறித்துள்ளனர்.
இந்நிலையில் தினேசின் அண்ணனுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கருப்பணசாமி, திருமூர்த்தி மற்றும் கணேஷ் என 3 பேரும் மீண்டும் தினேசிடம் ரூ.1 லட்சம் தர வேண்டும் எனவும், பணம் தராவிட்டால் பெண்ணுடன் இருக்கும் தவறான தொடர்பை அனைவரிடமும் சொல்லி, தினேசின் அண்ணன் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து தினேஷ் பெருமாநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பணசாமி, திருமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணேசை தேடி வருகின்றனர்.