முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரசில் போட்டி இல்லை - டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடக காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இல்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
சித்ரதுர்கா:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நிவாரணம் கிடைக்கவில்லை
கிராமங்களில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கலாசார ரீதியாக தங்கள் பரம்பரை தொழிலை செய்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக அவர்கள் கடந்த ஓராண்டாக கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை. வேலை வாய்ப்புகளையும் அவர்கள் இழந்துவிட்டனர்.
அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நான் கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தேன். லம்பானி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்களின் கலாசாரம், பண்பாட்டை அறிந்துள்ளேன். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாங்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினோம்.
போட்டி இல்லை
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்த விஷயத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நாளை (அதாவது இன்று) பெங்களூருவில் ஆலோசனை நடத்த உள்ளேன்.
சித்தராமையா ஆட்சி காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டன. எங்கள் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு எந்த போட்டியும் இல்லை. பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், அவரது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.