மதுக்கூரில், ஆதரவாளர்களின் ரகளைக்கு மத்தியில் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய அ.தி.மு.க. பிரமுகர் சினிமா காட்சிகளை மிஞ்சிய களேபரங்களால் பரபரப்பு

மதுக்கூரில் ஆதரவாளர்களின் ரகளைக்கு மத்தியில் போலீஸ் நிலையத்தில் இருந்து அ.தி.மு.க. பிரமுகர் தப்பி ஓடினார். சினிமா காட்சிகளை மிஞ்சிய களேபரங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-15 20:10 GMT
மதுக்கூர்:-

மதுக்கூரில் ஆதரவாளர்களின் ரகளைக்கு மத்தியில் போலீஸ் நிலையத்தில் இருந்து அ.தி.மு.க. பிரமுகர் தப்பி ஓடினார். சினிமா காட்சிகளை மிஞ்சிய களேபரங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கல்யாணஓடை கிராமத்தை சேர்ந்தவர் துரை.செந்தில்(வயது 56). மதுக்கூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ள இவருடைய மனைவி அமுதா, மதுக்கூர் ஒன்றியக்குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். 
கடந்த ஆண்டு(2020) நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் துரை.செந்திலை மதுக்கூர் போலீசார் கைது செய்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். 

தீக்குளிக்க முயற்சி

இந்த தகவல் மதுக்கூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள அவருடைய ஆதரவாளர்களிடம் பரவியது. இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு, அவரை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலர் மண்எண்ணெய் மற்றும் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீர் ஊற்றி சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து துரை.செந்திலின் ஆதரவாளர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிலர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து  அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டும், அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தவும் செய்தனர். போலீஸ் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. 

போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார்

இதன் காரணமாக போலீஸ் நிலைய பகுதியில் ஒரே களேபரமாக காட்சி அளித்தது. ஆதரவாளர்களின் இந்த ரகளைக்கு மத்தியில் துரை.செந்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து சாதுர்யமாக தப்பி சென்றார். அவர் தப்பி சென்றதும் அவருடைய ஆதரவாளர்களும் அங்கிருந்து கொஞ்சம், கொஞ்சமாக கலைந்து சென்றனர். 
ரகளை, கூச்சல், குழப்பங்கள் முடிந்து சூழல் அமைதியான பின்னரே அ.தி.மு.க. பிரமுகர் போலீஸ் நிலையத்தில் இருந்து துரை.செந்தில் தப்பி சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. 

15 பேர் கைது

இதுகுறித்து மதுக்கூர் போலீசார் துரை.செந்தில் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் 15 பேரை நேற்று கைது செய்து, பட்டுக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சினிமாவை மிஞ்சிய களேபரங்கள்

போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபடுவது, கைதான நபர் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே தப்பி செல்வது போன்ற காட்சிகளை பல்வேறு சினிமாக்களில் பார்த்திருப்போம். 
அதுபோன்ற சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு மதுக்கூர் பகுதியில் நடந்த இந்த களேபரங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிய துரை.செந்தில், தனிப்படை போலீசாரிடம் சென்னை அருகே நேற்று பிடிபட்டார். அவரை போலீசார் தஞ்சை மாவட்டத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

மேலும் செய்திகள்