குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை உடலை வீசிய மூதாட்டி சிக்கினார்

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை உடலை வீசிய மூதாட்டி சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Update: 2021-07-15 20:06 GMT
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நாட்டாண்மை கழக கட்டிடம் எதிரே உள்ள குப்பை தொட்டியில் கடந்த 13-ந் தேதி பச்சிளம் குழந்தை உடல் கிடந்தது. கலெக்டர் அலுவலகம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த குழந்தையின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டு விசாரணையை முடுக்கி விட்டனர். அந்த கேமராவில் மூதாட்டி ஒருவர் குழந்தையை ஒரு பையில் வைத்து குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

அந்த மூதாட்டி யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஆத்தூர் பகுதியை சேர்ந்த முத்தம்மாள் (வயது 65) என்பவர், குழந்தையை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த மூதாட்டியை பிடித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், மூதாட்டியின் உறவுக்கார பெண்ணுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக வாங்கி வந்து குப்பை தொட்டியில் வீசி சென்றதாகவும் அந்த மூதாட்டி போலீசாரிடம் கூறியுள்ளார்.

மூதாட்டியின் பதிலில் திருப்தி அளிக்காத போலீசார், ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த மூதாட்டி சொல்வதில் உண்மை தன்மை குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்