வால்பாறை பொள்ளாச்சி பகுதியில் கனமழை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

வால்பாறை, பொள்ளாச்சி பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணைக்கு செல்லும் சாலையில் ஏற்பட்ட மண்சரிவால் கற்கள் விழுந்தன.

Update: 2021-07-15 17:10 GMT
வால்பாறை

வால்பாறை, பொள்ளாச்சி பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணைக்கு செல்லும் சாலையில் ஏற்பட்ட மண்சரிவால் கற்கள் விழுந்தன. 

கனமழை 

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியதால், அங்கு இரவுபகலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

அதுபோன்று சோலையார் அணைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் மேல்நீரார், கீழ் நீரார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கனமழை வெளுத்து வாங்குவதால், அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. 

நீர்வரத்து அதிகரிப்பு 

இதன் காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் இந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 128 அடியை தாண்டியது. அணைக்கு வினாடிக்கு 3,586 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

அணையில் இருந்து சோலையாறு மின்நிலையம்-1 மூலமாக 406 கனஅடியும், சோலையாறு மின் நிலையம் -2 மூலம் 441 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

நடைபாதை உடைந்தது 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதை படிக்கட்டு திடீரென்று உடைந்தது. 

இதனால் அந்த வழியை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து உள்ளனர். அதுபோன்று வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகளும், மரக்கிளைகளும் சாலையில் விழுந்தன. 

கற்கள் அகற்றம் 

இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சாலை யில் விழுந்து கிடந்த மண், கற்கள் மற்றும் பாறைகளை உடனடியாக அகற்றினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. 

வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், தலையில் பிளாஸ்டிக் பைகளை போட்டு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால், அனைத்துத்துறையை சேர்ந்தவர்களும் உஷார் நிலையில் இருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

பலத்த மழை

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது.  பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. 

மழையின் போது சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கோட்டூர் ரோடு, மீன்கரை ரோடு ரெயில்வே பாலங்களுக்கு கீழ் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

இதனால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது

மழையின் காரணமாக பி.ஏ.பி. திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 2,321 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

இதேபோன்று ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 2,140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மழையளவு

வால்பாறை, பொள்ளாச்சி பகுதியில் பெய்த மழையளவு (மில்லி மீட்டர்) விவரம் வருமாறு:-

வால்பாறை 42 மி.மீ., மேல்நீராறு 88, கீழ் நீராறு 40, சோலையார் 45, சர்க்கார்பதி 20, வேட்டைக்காரன்புதூர் 7, தூணக்கடவு 27, பெருவாரிபள்ளம் 45, கீழ் ஆழியாறு 12, நவமலை 7, பொள்ளாச்சி 6, நல்லாறு 7, ஆழியாறு 9, பரம்பிக்குளம் 31 மி.மீட்டர்.

மேலும் செய்திகள்