ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
திருப்பூர் மற்றும் மங்கலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மற்றும் மங்கலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்குட்பட்ட சில பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள பொருட்களை அதன் உரிமையாளர்கள் அகற்றுமாறும் ஏற்கனவே ஆட்டோ மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் குமார்நகர் முதல் சிறுபூலுவப்பட்டி வரை இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
1வது மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம் தலைமையில் உதவி பொறியாளர் ஹரி, சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையை ஆக்கிரமித்தும் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பொக்லைன் மூலமாக அதிரடியாக அகற்றப்பட்டன. அப்போது ஒருசில கடை உரிமையாளர்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் வழங்க முடியாது என்று கூறி ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டன. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மங்கலம்
இதுபோல் மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் ரோட்டின் கிழக்குபகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து முடிக்கப்பட்டது. அதே போல் பல்லடம் ரோட்டின் மேற்கு பகுதியிலும் 6 வீடுகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த வீடுகளை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அவினாசி உதவிக்கோட்ட பொறியாளர் சந்திரசேகர், இளநிலை பொறியாளர் சக்திவேல், மங்கலம் வருவாய்த்துறை அதிகாரி, மங்கலம் போலீசார் முன்னிலையில் பொக்லைன் மூலம் மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த 6 வீடுகள் அகற்றப்பட்டது.
---
மங்கலத்தில் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றிய போது எடுத்த படம்.
---------------------
Reporter : M. Balasubramanian Location : Tirupur - Annuparpalayam