சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களை தேவையின்றி அலைகழித்தால் நடவடிக்கை

சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களை தேவையின்றி அலைகழித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2021-07-15 00:42 GMT
எலச்சிபாளையம்,

திருச்செங்கோட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் ½ மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வில் அங்கிருந்த பத்திரப்பதிவு அலுவலரிடம் தற்போது எந்த நம்பர் டோக்கன் பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் கேட்டார். அதற்கு பத்திரப்பதிவு அலுவலர் 20-ம் நம்பர் டோக்கன் பத்திரப்பதிவு நடைபெறுகிறது என்று பதில் கூறினார். 

இதனைத்தொடர்ந்து அலுவலகத்திற்கு வெளியே சென்ற அமைச்சர் அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரித்தார். அதில் 8-ம் எண் டோக்கனே பதிவு செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. 8-வது எண் டோக்கன் பதிவு செய்யப்படும்போது எவ்வாறு 20-வது எண் உள்ள டோக்கன் பதிவு செய்யப்படுகிறது? என்று அங்கிருந்த சார் பதிவாளர் முருகானந்தனிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார். ேமலும் அங்கிருந்த தரகர் நவமணியை அமைச்சர் எச்சரித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:- 

சேலம் மண்டல வணிகவரித்துறை மற்றும் பதிவு துறை ஆய்வாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்த கொள்ள வந்தபோது பத்திரப்பதிவு சார் பதிவாளர்கள், மண்டல பதிவாளர்கள் ஆகியோரிடம் துறையின் அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, தலைவர் சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவம் ஆகியோர் ஆய்வு நடத்தினோம். எங்கெங்கே பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்களோ அந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். 

பத்திரப்பதிவுகளை நடைமுறைப்படுத்தி வரிசையாக பத்திரப்பதிவு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என சொல்லியிருக்கிறோம். இந்த அலுவலகத்தை பொறுத்தவரை வேண்டியவர்கள் என்று இவர்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுவதும், பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதும் தெரியவந்தது.

இது போல் நடக்கக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செங்கோடு சார் பதிவாளர் உடனடியாக மாற்றப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்