துப்பாக்கி விற்க முயன்ற ரவுடிகள் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்க முயன்ற ரவுடிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், 24 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
ரவுடிகள் கைது
பெங்களூரு பானசாவடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துப்பாக்கி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்களது பெயர்கள் பயாஜ் உல்லா (வயது 32), சையத் சிராஜ் (42) மற்றும் முகமது அலி (32) என்று தெரிந்தது. இவர்களில் பயாஜ் உல்லா, முகமது அலி ரவுடிகள் ஆவார்கள். பயாஜ் உல்லா மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட 6 வழக்குகள் உள்ளன.
அவரது பெயர் சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதுபோல், முகமது அலி மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் அவரது பெயர் சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது.
3 துப்பாக்கிகள் பறிமுதல்
கைதான 3 பேரும், மராட்டிய மாநிலம் கொப்பர்கியாம் பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு நாட்டு துப்பாக்கிகளை விலைக்கு வாங்கி, அவற்றை பெங்களூருவுக்கு கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதுபோல், பானசாவடியை சேர்ந்த ஒருவருக்கு துப்பாக்கியை விற்க முயன்ற போது 3 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள்.
கைதானவர்களிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், 24 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 3 பேர் மீதும் பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.