கர்நாடகத்தில் மின்சார பைக் டாக்சி திட்டம் - எடியூரப்பா தொடங்கி வைத்தார்

கர்நாடகத்தில் மின்சார பைக் டாக்சி திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-14 20:33 GMT
பெங்களூரு:
  
மின்சார பைக் டாக்சி

  கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் மின்சார பைக் டாக்சி திட்ட தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட நகர பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்து பஸ் நிலையம், மெட்ரோ நிலையம், ரெயில் நியைத்திற்கு செல்ல நேரம் ஆகிவிடுகிறது. இதை குறைக்கும் நோக்கத்தில் இந்த பைக் டாக்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு விரைவாக வர முடியும். பொது போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இந்த பைக் டாக்சி ஒரு பாலமாக செயல்படும்.

பல்வேறு சலுகைகள்

  இது சுயதொழிலை அதிகரிக்க உதவும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த திட்டத்தால் எரிபொருளை சேமிக்கவும் முடியும். எதிர்கால சந்ததியினருக்கு நல்ல பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்று எரிபொருளை பயன்படுத்த அரசு நடவடிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கியாஸ் மூலம் வாகனங்கள் இயக்கப்படும் அரசின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

  அதன் தொடர்ச்சியாக மத்திய-மாநில அரசுகள் பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு வரி உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு தயாராக உள்ளது.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்