கடையநல்லூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை

கடையநல்லூர் அருகே வனப்பகுதியில் யானை இறந்து கிடந்தது.

Update: 2021-07-14 20:27 GMT
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் வைரவன்குளம் பீட் கருப்பாநதி வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு யானை இறந்து, உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட வன அலுவலர் கவுதம், வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இறந்த யானையை நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் முத்துகிருஷ்ணன், மனோகரன், வன ஆய்வாளர் அர்னால்டு வினோத் உள்ளிட்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். யானையின் உடல் பாகங்களை ஆய்வக பரிசோதனைக்காக சேகரித்து அனுப்பினர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘இறந்தது ஆண் யானை. அதன் வயது சுமார் 6 முதல் 6½ வயது வரை இருக்கலாம். அந்த யாைன பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். இறந்த யானையை வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

மேலும் செய்திகள்