திருப்பனந்தாள் அருகே ஆற்று சுழலில் சிக்கி பள்ளி மாணவர் சாவு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்
திருப்பனந்தாள் அருகே ஆற்று சுழலில் சிக்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். உறவினர் வீட்டுக்கு வந்தபோது இந்த சோகம் நேர்ந்தது.
திருப்பனந்தாள்:-
திருப்பனந்தாள் அருகே ஆற்று சுழலில் சிக்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். உறவினர் வீட்டுக்கு வந்தபோது இந்த சோகம் நேர்ந்தது.
உறவினர் வீட்டுக்கு வந்த மாணவர்
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சீமான். இவருடைய மனைவி பூங்கோதை. இவர்களுடைய மகன் சிவசண்முகம் (வயது 14). இவர், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
சீமான் தனது மனைவி மற்றும் மகனுடன் திருப்பனந்தாள் அருகே குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சமீபத்தில் வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவசண்முகம் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் அங்கு உள்ள மண்ணியாறு தடுப்பணைக்கு குளிக்க சென்றார்.
சுழலில் சிக்கினார்
அப்போது ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் சுழலில் சிக்கிய சிவசண்முகம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனால் பதறிப்போன அவருடன் குளித்துக்கொண்டிருந்த சக சிறுவர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆற்றில் இறங்கி சிவசண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
3 மணி நேர தேடுதலுக்கு பிறகு ஆற்றின் மற்றொரு கரை பகுதியில் சிவசண்முகத்தை மீட்டனர். உடனடியாக அவரை திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் வீட்டுக்கு வந்தபோது ஆற்று சுழலில் சிக்கி பள்ளி மாணவர் பலியானது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.