பலத்த மழை காரணமாக காண்டூர் கால்வாயில் மண்சரிவு
பலத்த மழையின் காரணமாக காண்டூர் கால்வாயில் மண் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி
பலத்த மழையின் காரணமாக காண்டூர் கால்வாயில் மண் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காண்டூர் கால்வாய்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூர்த்தி அணை. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணைக்கு பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணையான பரம்பிக்குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
பரம்பிக்குளத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சர்க்கார்பதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக 46 கி.மீ. தூரத்திற்கு காண்டூர் கால்வாய் செல்கிறது.
மண் சரிவு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியாறு அருகே காண்டூர் கால்வாயில் மண்சரிவு ஏற்பட்டது.
தற்போது பரம்பிக்குளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளதால் எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த நிலையில் கால்வாய் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
பொக்லைன் எந்திரம் கொண்டு கால்வாயில் விழுந்து கிடக்கும் பாறை கற்கள் மற்றும் மண் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தற்போது லேசான மழை பெய்து வருவதால், பருவமழை தீவிரமடைவதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அகற்றும் பணிகள்
வனப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆழியாறு அருகே சுரங்கபாதை தொடங்கும் கால்வாயின் 4.227 கி.மீ. தூரம் மற்றும் 36.400-வது கி.மீ. தூரம் ஆகிய இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.
தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் மண், கற்கள் உள்ளிட்டவகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தவிர கால்வாயில் கசிவு உள்ள இடங்களை கண்டறிந்து அதை சரிசெய்யும் பணிகளும் நடந்து வருகிறது.
மழை பெய்து வருவதால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மழைக்கு முன்பாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.