திருப்பூர் கே.வி.ஆர்.பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர் கே.வி.ஆர்.பகுதியில்ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2021-07-14 17:17 GMT
வீரபாண்டி
திருப்பூர் 56-வது வார்டு கே.வி.ஆர் நகர், ஏரி மேடு பகுதியில் பல வருடங்களாக மழைநீர் செல்லும் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பலரும் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஊருக்குள் செல்வதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அப்பகுதியில் முன்கூட்டியே அனைவருக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று ஏரிமேடு சுற்றியுள்ள 6 வீடுகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். 
ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடுமென்று, சென்ட்ரல் போலீசார் மற்றும் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை இடித்து தரைமட்டம் ஆக்கினர். சம்பவ இடத்தில் உதவி பொறியாளர் கண்ணன் மற்றும் சென்ட்ரல் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் போலீசார் என பலரும் இருந்தனர்.

மேலும் செய்திகள்