போலி கையெழுத்து போட்டு, வங்கியில் ரூ.5¾ லட்சம் பெற முயன்ற வனத்துறை அலுவலக தற்காலிக பணியாளர் கைது

போலி கையெழுத்து போட்டு, வங்கியில் ரூ.5¾ லட்சம் பெற முயன்ற வனத்துறை அலுவலக தற்காலிக பணியாளர் கைது

Update: 2021-07-14 17:13 GMT
உடுமலை, 
உடுமலை வனத்துறை அதிகாரி பெயரில் போலி கையெழுத்து போட்டு, வங்கியில் ரூ.5¾ லட்சம் பெற முயன்ற வனத்துறை அலுவலக தற்காலிக பணியாளர் கைது செய்யப்பட்டார்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வனத்துறை அலுவலக காசோலை
உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து நேற்று முன்தினம் மதியம் உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்திற்கு (மாவட்ட வன அலுவலகம்) தொலைபேசியில் அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசிய வங்கி மேலாளர், வன அலுவலக காசோலை ஒன்றை ஒருவர் வங்கிக்கு கொண்டு வந்திருப்பதாகவும், அதில் கையெழுத்து மாறியுள்ளதாகவும், அதனால் சந்தேகமாக உள்ளது என்றும் கூறினார்.
உடனே வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஊழியர் பிரபு, வங்கிக்கு நேரடியாக சென்று வங்கி மேலாளரிடம் விசாரித்தார். அப்போது வங்கி மேலாளர், அந்த காசோலையை வனத்துறை ஊழியரிடம் காண்பித்தார்.
போலி கையெழுத்து
அந்த காசோலையில் தனக்கு (செல்ப்) என்று ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்திற்கு தொகை எழுதப்பட்டிருந்தது. அந்த காசோலையில் வனத்துறை துணை இயக்குனர் கையெழுத்துபோன்று போலி கையெழுத்து போடப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில், காசோலையை கொண்டு வந்த நபர் வங்கியில் இல்லை. இதைத்தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்த வனத்துறை ஊழியர், அலுவலக மேஜையில் வைத்திருந்த காசோலை புத்தகத்தை பார்த்தபோது அதில் 2 காசோலைகளை காணவில்லை.
இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் மடத்துக்குளம் தாலுகா பெருமாள்புதூரைச்சேர்ந்த பழனிசாமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த காசோலையை எடுத்ததாக பழனிசாமி ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வனத்துறை ஊழியர் பிரபு, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது பற்றி உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தற்காலிக பணியாளர் கைது
இந்த புகாரைத்தொடர்ந்து உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் உத்தரவின் பேரில் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து, வனத்துறை அலுவலக தற்காலிக பணியாளர் பழனிசாமியை (வயது 28) கைது செய்தார். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்