சேவூரில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் ஒன்று பாதுகாப்பின்றி கிடக்கிறது.

சேவூரில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் ஒன்று பாதுகாப்பின்றி கிடக்கிறது.

Update: 2021-07-14 17:03 GMT
சேவூர்,
சேவூரில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் ஒன்று பாதுகாப்பின்றி கிடக்கிறது.
நடுகல்
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூரில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே கடந்த வருடம் ஜூன் மாதம் நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்போது பெய்த மழை காரணமாக மண்ணில் புதைந்திருந்த நடுகல்லின் ஒரு பகுதி வெளியே தெரிய ஆரம்பித்தது. இது பற்றி அறிந்து வந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த நடுகல்லைச் சுத்தம் செய்து ஆய்வு செய்தார்.
இது குறித்து முடியரசு கூறியதாவது:-
 இது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகர் கால வகையான அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் ஆகும். முதல் நிலையாக போர்க்களக் காட்சி அமைந்துள்ளது. வீரன் வலது கையில் வாளும் இடக்கையில் கேடயமும் வைத்துள்ளான். வீரன் எதிர்கொள்ளும் மற்றொரு வீரனை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிற்பம் சிதைவுபட்டுள்ளது. யாரை எதிர்கொள்கிறான் என்பது இதனால் தெரியவில்லை.
இப்போரில் அவன் இறந்து விட்டதால் அவனது இரு மனைவியரும் சிதையில் விழுந்து உயிர்துறந்துள்ளனர். அடுத்த நிலை தேவ கன்னியர் இருவர் வலது இடது புறங்களில் சூழ இறந்த வீரனையும் அவனது இரு மனைவியரையும் வானுலகம் அழைத்துச் செல்தல் ஆகும். தேவ கன்னியரின் கரத்தில் சாமரம் வீசுவது போலக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
3-வது நிலை
மூன்றாவது நிலையில் வீரனும் இரு மனைவியரும் சிவலோகப் பதவி அடைகின்றனர். நந்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி நிலையாக வீரன் சிவலங்கத்திற்கு மாலை அணிவித்து சிவபதம் சேர்தல் ஆகும். இவ்வீரன் இப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். வீரன் மற்றும் அவனது மனைவியரின் ஆடை அணிகலன்களை பார்க்கும் போது இது தெரிகிறது. 
இக்கல் 6 அடி உயரமும் 4 அடி அகலமும் 5  இஞ்ச் கனமுள்ள பலகைக்கல் ஆகும். 
இவ்வாறு தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு தெரிவித்திதிருந்தார். இது அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் என உறுதிப்படுத்தினார்.
அகழ்வாய்ப்பகத்திற்கு
இக் கல்லை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நிலவருவாய் ஆய்வாளர் ராமசாமி அன்றைய தினமே பாதுகாப்பாக சேவூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் வளாகத்தில் வைத்தார்.
மேலும் அன்றைய அகழ்வாய்ப்பக அதிகாரி சிவக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவு தந்தவுடன் அகழ்வாய்ப்பகத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று சிவக்குமார் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை சதிக்கல் எடுத்து செல்லவில்லை.
சமூக ஆர்வலர்கள்
இதுகுறித்து சமூக ஆர்வளர்கள் கூறுகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சேவூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் வளாகத்தில் பாதுகாப்பின்றி சதிக்கல் உள்ளது. அகழ்வாய்ப்பகத்திற்கு இன்று வரை எடுத்து செல்லாததால், தற்போது செடிகள், மண் போன்றவை இச்சதிக்கல்லை மூடும் நிலையில் உள்ளது.
 இக்கோவிலில் தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இதனால் சதிக்கல் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் அகழ்வாய்ப்பகத்திற்கோ, அல்லது பாதுகாப்பான இடத்திற்கோ இந்த சதிக்கல்லை எடுத்து செல்ல வேண்டும் என கூறினர்.

மேலும் செய்திகள்