சின்னாளப்பட்டியில் எலக்ட்ரீசியன் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
சின்னாளப்பட்டியில் எலக்ட்ரீசியன் வீட்டில் 10 பவுன் நகை திருடுபோனது.
சின்னாளப்பட்டி:
சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் உள்ள நாயக்கர் முதல் தெருவில் வசித்து வருபவர் கண்ணையா (வயது 55). எலக்ட்ரீசியன். அவருடைய மனைவி ராஜாத்தி. நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களது மகன் செல்லப்பாண்டி மட்டும் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் எழுந்த செல்லப்பாண்டி, வீட்டின் கதவை பூட்டாமல் மாடிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர்.
இந்தநிலையில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த கண்ணையா, பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணையா புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இதேபோல் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது, வீட்டில் இருந்து மோப்பம்பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.